Puthumai Website -புதுமை வலைத்தளம்  

லேட் பேட்டி, கொதிக்கும் அஜீத் -சுற்றி வளைக்கும் அரசியல்வாதிகள்

Picture
பஞ்சரான வீலிலேயே முள்ளு குத்தும் என்பதுதான் விதி! அஜீத்தை பொறுத்தவரை அந்த விதிதான் இப்போது சிக்சர் அடித்துக் கொண்டிருக்கிறது. சின்னதாக ஒரு வருத்தம் தெரிவித்தால் போதும். அத்தனையும் ஓவர் என்று நினைத்திருந்த நேரத்தில், எப்போதோ கொடுத்த ஒரு பேட்டி வெளியாகி புது பிரச்சனைக்கு அஸ்திவாரம் போட்டிருக்கிறது.

முதல்வர் கலைஞரை சந்திப்பதற்கு முன்பு தனக்கு அவ்வப்போது ஆறுதல் தரும் கார் ரேசில் கலந்து கொள்ள சென்றிருந்தார் அஜீத். அங்கும் விடாமல் துரத்தி சென்று கலையுலக பேச்சு தொடர்பாக பேட்டியெடுத்தார் ஒரு ஆங்கில நிருபர். அதை உடனடியாக வெளியிட்டிருந்தால் பிரச்சனையே இல்லை. ஒரு வாரம் கழித்து வெளியிட்டதுதான் அதிர்ச்சி.

திரையுலக அமைப்புகள் அஜீத்திற்கு எதிராக முடிவெடுத்து அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்ட பின்னால் இந்த பேட்டி வெளியாகிவிட்டது. அதில், "நான் பேசியதில் தவறில்லை. மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன். வேண்டுமென்றால் சினிமாவை விட்டே போய்விடுகிறேன்" என்று கொதித்திருந்தார் அஜீத். வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறிய பிறகு அவர் இப்படி பதில் சொன்னதாக எடுத்துக் கொண்டது திரையுலகம். மறுபடியும் இதனால் பரபரப்பு தொற்றிக் கொள்ள, செய்வதறியாது கையை பிசைந்து கொண்டு நின்றது அஜீத் தரப்பு.

மாலை நாளேடுகள் இந்த பேட்டியை அப்படியே தமிழாக்கம் செய்து வெளியிட்டால் அது இன்னும் பிரச்சனையாகிவிடுமே என்று அஞ்சிய அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா எல்லா மாலை நாளிதழ்களுக்கும் போன் அடித்து "அந்த பேட்டியை போட்றாதீங்க" என்று கேட்டுக் கொண்டார். அப்படியும் ஒன்றிரண்டு நாளிதழ்களில் செய்தி வெளிவரதான் செய்தது.

இது ஒருபுறம் இருக்க, அஜீத்தை வம்பில் இழுத்து மாட்டி விடுவது போலவே இன்னொரு சப்போர்ட். மத்திய அமைக்கர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அஜீத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார். அதிமுக தரப்பிலிருந்தும் அஜீத்திற்கு ஆதரவாக அறிக்கை வரும் போல தெரிகிறது.

அரசியல் வேண்டாம் என்று அப்பட்டமாக தெரிவித்தும், அஜீத்தை விடாமல் வளைக்கும் போலிருக்கிறது அந்த பாழாய் போன அரசியல்!