Puthumai Website -புதுமை வலைத்தளம்  

நடிகை ரோஜா படப்பிடிப்பில் ரகளை

Picture
ஆந்திராவில் தெலுங்கானா தனி மாநிலம் கேட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. தலைநகர் ஐதராபாத், தெலுங்கானா பகுதியில் உள்ளது. எனவே, அங்கு நடைபெறும் சினிமா படப்பிடிப்புகளில் ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளை சேர்ந்த நடிகர், நடிகைகள் மீது தாக்குதல் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, தெலுங்கானா தனி மாநிலத்தை எதிர்க்கும் நடிகர்களின் படப்பிடிப்புகளில் தெலுங்கானா ஆதரவாளர்கள் ரகளை செய்கின்றனர்.

இந்த சூழ்நிலையில், ஐதராபாத்தில் உள்ள கூகட்பள்ளி என்ற இடத்தில் நடிகை ரோஜா நடித்து வரும் `கோலிமார்' என்ற தெலுங்கு சினிமா படப்பிடிப்பு நடந்தது. காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள ரோஜா, தெலுங்கானா கோரிக்கைக்கு தீவிர எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

எனவே, அவருடைய படப்பிடிப்பு நடைபெறும் தகவல் கிடைத்ததும் 100-க்கும் மேற்பட்ட தெலுங்கானா ஆதரவாளர்கள் திரண்டு வந்தனர். அப்போது, நடிகை ரோஜா நடிக்கும் காட்சிகளை படமாக்கி கொண்டு இருந்தனர். உடனே, போலீசார் விரைந்து வந்து `தெலுங்கானா ஆதரவாளர்கள் வந்து கொண்டு இருப்பதால் படப்பிடிப்பை ரத்து செய்யுங்கள்' என்று கூறினர்.

அதற்குள் தெலுங்கானா ஆதரவாளர்கள் வந்து விட்டனர். படப்பிடிப்பு தளத்தில் உள்ள கருவிகளை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். போலீசார் தலையிட்டு, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு விட்டதாக கூறி அவர்களை சமாதானப்படுத்தினர். நடிகை ரோஜா மற்றும் படப்பிடிப்பு குழுவினரை பத்திரமாக அனுப்பிவைத்தனர். மேலும், படப்பிடிப்புக்காக போடப்பட்டு இருந்த `செட்டுகள்' அகற்றப்பட்டு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.

சினிமா படப்பிடிப்புகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்று ஆந்திர முதல்-மந்திரி ரோசய்யா, உள்துறை மந்திரி சபீதா ரெட்டி ஆகியோர் தெரிவித்த போதிலும் இதுபோன்று நடந்தது குறித்து ரோஜா கண்டனம் தெரிவித்தார்.