Puthumai Website -புதுமை வலைத்தளம்  

தமிழ்ப்படம்

Picture
சிவா ஐ.பி.எஸ். சென்னை நகரத்தை கதிகலங்கச் செய்யும் (?) பிரபல ரவுடிகளை ஒவ்வொருவராக வீழ்த்துகிறார். இதுதான் படத்தோட ஒன்லைனா இருந்தாலும், படம் ஏதோ ஆக்க்ஷன் படமாக இருக்கப் போகிறது என்று நீங்கள் நினைத்தீர்களானால் ஏமாந்து போவீர்கள். தியேட்டருக்குள் நீங்கள் நுழைந்ததில் இருந்து நீங்கள் வெளியே வரும் வரை ஒவ்வொரு காட்சியிலும் உங்களை சிரிக்க வைக்கிறார்கள். ஒரு தடவை சிரிச்சு உட்கார்தீங்கன்னா, அடுத்த நொடியே வேறொரு வெடிசிரிப்புக்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அந்த அளவுக்கு குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் படம் தமிழ்படம்.

மிர்ச்சி சிவா ஏற்கனவே சென்னை 28, சரோஜா படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் தான் இவர் முழு ஹீரோவாக நடித்திருக்கிறார். இவரது நண்பர்களான, வெண்ணிற ஆடை மூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர், மனோபாலா இவர்கள் திரையில் வந்துவிட்டாலே தியேட்டரில் சிரிப்புச் சரவெடியாகத்தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது இவர்கள் அடிக்கும் லூட்டியைச் சொல்வா வேண்டும்.

தாதாக்களை கொல்லும் காட்சியிலாவது ஏதோ ஆக்க்ஷன் இருக்கும் என்று நினைத்தால் அதுவும் இல்லை. சிவா செய்யும் காமெடி சேட்டைகளினாலேயே தாதாக்கள் செத்துப் போகிறார்கள். ஒமக சீயா பாடலுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. இடைவேளைக்குப் பிறகு ‘சரவெடி ஆரம்பம்’ என்று டைட்டில் போடுகிறார்கள். மீண்டும் காமெடி சரவெடியைப் போட்டு சிரிக்க வைக்கிறார்கள். ஒரே பாடலில் பணக்காரன் ஆவது, ஹீரோவுடன் பாடலின் நடன இயக்குநர் டேன்ஸ் ஆடுவது என எல்லாவற்றையும் கிண்டல் பண்ணியிருக்கிறார்கள்.

தண்டவாளம் இல்லாமலே ஓடும் ரயில், குடும்பப் பாடல் என ஒவ்வொரு காட்சிக்கும் மெனக்கெட்டு யோசித்திருப்பார்கள் போலும். கடைசி சண்டைக்காட்சி கலக்கலாக உள்ளது. சண்டைக்காட்சியில் வோடபோன் பொம்மையையும் இணைத்திருப்பது சூப்பர். ஒளிப்பதிவு நீரவ்ஷா அருமையாக கிராமத்துக் காட்சிகள் நகரத்து காட்சிகள் என அத்தனையையும் அழகாக படமாக்கியுள்ளார். படத்தின் நாயகி டூயட் பாடிவிட்டுப் போகிறார். மேலும் சில காட்சிகளில் அவர் வந்தாலும். நடிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. குத்து பாட்டுக்கு நடனமாடும் கஸ்தூரி. பாடல் கிளாமராகத் தெரியவில்லை, காரணம், அதிலும் கொஞ்சம் சென்சார் ஓடவிட்டு காமெடி பண்ணியிருக்கிறார்கள்.

சிவாவின் அலட்டல் இல்லாத நடிப்புக்கு சபாஷ் போடலாம். எந்தக் காட்சியிலும் கேஷூவலாக செய்துவிட்டுப் போகிறார். (நல்ல ஸ்கோப் இருக்கு பாஸ்!) இந்த கேரக்டருக்கு சிவாவைத் தவிர வேறு யாரும் அவ்வளவு பொருத்தமாக இருப்பார்களா என்பது சந்தேகம்தான். அவரை ஹீரோவாக தேர்ந்தெடுத்ததிலேயே படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பது மட்டுமே இயக்குநரின் டார்கெட்டாக இருந்திருக்கிறது. அதை பக்காவாக நிறைவேற்றியிருக்கிறார் புதியவர் சி.எஸ். அமுதன்!