Puthumai Website -புதுமை வலைத்தளம்  

டிஜிட்டல் சினிமா தூரமில்லை

Picture
எம்.ஜி.ஆரையும்,​​ சிவாஜியையும் கூட நடிக்க வைக்கலாம்.​ அந்த சினிமா வெகுதூரம் இல்லை.

"இயக்குநர்களுக்கு உட்பட்டவன்தான் ஒளிப்பதிவாளன்.​ இயக்குநர்களின் எண்ணங்களை பதிவாக்குவது சுலபமானது அல்ல.​ ஆயிரம் விஷயங்கள் சரியா தவறா என யோசிக்கும் முன்னே கடந்து போய் விடும்' என்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்.​ "நளதமயந்தி',​ "மும்பை எக்ஸ்பிரஸ்',​ "யாரடி நீ மோகினி' படங்களின் ஒளிப்பதிவாளர்.

வெளிநாட்டு காட்சிகள் மட்டும் ஏன் தெள்ள தெளிவாக இருக்கிறது?​ ​

வெளிநாடுகளில் மாசு இல்லை.​ வாகனப் புகை உள்ளிட்ட சில விஷயங்கள் நம் நாட்டில் அதிகமாக இருக்கிறது.​ இதுதான் நம் நாட்டில் எடுக்கப்படும் காட்சிகளில் வறட்சியை ஏற்படுத்துகிறது.​ ஆஸ்திரேலியா,​​ நியூசிலாந்து,​​ ஜிம்பாவே என பாடல்களை படமாக்க பயணப்படுவது அதற்குதான்.​ மற்றபடி வெளிநாட்டு காட்சிகளுக்கு மட்டும் தனி கேமிராவெல்லாம் கிடையாது.

கிராமத்து படங்கள் செய்யும் ஒளிப்பதிவாளர்கள் குறைந்து விட்டார்களே?​ ​

அப்படியெல்லாம் கிடையாது.​ நான் கூடத்தான் "குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' எஎன்ற முழுமையான கிராமத்து கதையில் பணியாற்றினேன்.​ கிராமத்துக் கதைகளுக்கு இவர்கள்தான் சரி என முத்திரை குத்தி விட்டார்கள்.​ அதனால் சிலருக்கு அந்த வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறது.​ பிறந்தது,​​ வளர்ந்தது எல்லாமே சென்னைதான் என்றாலும்,​​ என்னாலும் கிராமத்து கதையில் பயணிக்க முடிந்ததே.​ இயக்குநர்களின் பார்வைதான் இங்கு சினிமா.​ அதை நாங்கள் காட்சியாக்குகிறோம் அவ்வளவுதான்.

டிஜிட்டல் சினிமா எப்படியிருக்கும்?

வருங்காலத்தில் சினிமா முழுமையாக மாறப் போகிறது.​ சினிமாவை எளிமைப்படுத்த கமல்ஹாசனைப் போன்றவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.​ எளிமைக்கு கேúமிரா முக்கியமானதாக இருக்கும்.​ என்ன லென்ஸ்,​​ எப்படி ஆங்கிள் என பல விஷயங்கள் கற்றுக் கொண்டுதான் ஒளிப்பதிவாளராக முடியும் என்பது மாறியிருக்கிறது.​ டிஜிட்டல் காலத்தில் எம்.ஜி.ஆரையும்,​​ சிவாஜியையும் கூட நடிக்க வைக்கலாம்.​ அந்த சினிமா வெகுதூரம் இல்லை.

ஒளிப்பதிவாளர் இயக்குநராவது ஈசியா?​ ​

இயக்குநர்களுக்கு உட்பட்டவன்தான் ஒளிப்பதிவாளன்.​ காட்சிகளை,​​ இயக்குநரின் கோணங்களில் படமாக்கும் போது அவன் அங்கு இயக்குநராகிறான்.​ இயக்குநர் என்ன சொல்லப் போகிறார் என்பது ஒளிப்பதிவாளனுக்கு தெரிந்து விடும்.​ அந்த அனுபவம்தான் இங்கு பலரை இயக்குநராக்கி அழகு பார்த்திருக்கிறது.​ என் பயணமும் வருங்காலங்களில் அந்த எல்லையை தொடலாம்.

சமீபத்திய கவன ஈர்ப்பு?​ ​

ஆர்தர் வில்சன்,​​ ரவிவர்மன்,​​ ராஜேஷ் யாதவ் என பலர் இருக்கிறார்கள்.​ "நான் கடவுள்',​ "தசாவதாரம்',​ "பொக்கிஷம்' என சில படைப்புகள் கொஞ்சம் சிலிர்க்க வைத்தது.புது மாதிரியான உலகத்தை திறந்து வைக்கும் இவர்கள் எல்லாம் என் முன்னோடிகள்.​ அவர்களின் உயரம்தான் என் மைல்கல்.