Puthumai Website -புதுமை வலைத்தளம்  

ஜக்குபாய் (Jaggubhai Review)

Picture
போலீஸ் அதிகா‌ரி ஜெகன்நாதன் சமூக விரோதிகளை கையாள்வதில் ரஃப் அண்ட் டஃப். ஒருநாள் அவரது மனைவி இறந்து விட்டதாக ஆஸ்திரேலியாவிலிருந்து அழைப்பு வருகிறது. 21 வருடங்களுக்கு முன் பி‌ரிந்துபோன மனைவியின் உடலைப் பார்க்க ஆஸ்திரேலியா வருகிறார் ஜெகன்நாதன்.

வந்த இடத்தில் அவருக்கு இருபது வயதில் ஒரு மகள் இருப்பது தெ‌ரிய வருகிறது. மகளை சிலர் கொலை செய்ய‌த் துரத்துகிறார்கள். உள்ளூர் போலீஸ் நண்பனின் துணையுடன் ஜெகன்நாதன் வில்லன்களை வீழ்த்தி மகளை காப்பாற்றுகிறார்.
சூ‌ரியனில் பார்த்தது போலவே இருக்கிறார் சரத்குமார்.

உடம்பு மட்டுமல்ல, நடிப்பும். கன்னம் துடிக்க அவரை வசனம் பேச வைக்காததற்கு இயக்குனருக்கு தாங்க்ஸ்.
ஆஸ்திரேலிய அதிகா‌ரியை மூக்கில் குத்துகிறார், நான் ஜக்குபாய் என்ற போலி பெய‌ரில் வில்லனை பிடிக்க வந்திருக்கிறேன் என்கிறார்... எல்லாவற்றையும் ஆச்ச‌ரியமாக பார்த்து வெல்டன் ஜெகன்நாதன் என்று சல்யூட் வைக்கிறது ஆஸ்திரேலிய காவல்துறை. பேசாமல் இந்திய மாணவர்களை காப்பாற்ற இவரையே அனுப்பி வைக்கலாம்.ஸ்ரேயா சரத்தின் மகள்.

போதையில், “அவனைப் பார்த்தேன்... கொன்னே போடுவேன்” என்று அப்பா மீதிருக்கும் கோபத்தை காட்டும் போது ஆச்ச‌ரியப்பட வைக்கிறார். வில்லன்கள் கலைத்துப் போட்ட வீட்டைப் பார்த்து புலம்புவது அசலான குழந்தைத்தனம். ஜக்குபாயின் ஒரே ஆறுதல் இவர்.
சரத்தின் மனைவியாக வரும் இளவரசியின் கதாபாத்திரம் விளக்கெண்ணெய் மாதி‌ரி ஒட்டாமலே போகிறது. அவர் வில்லனின் ஆளாம், வில்லனை பிடிப்பதற்காக சரத் அவரை காதலித்து திருமணம் செய்கிறாரா‌ம்.

ஹீரோவின் மனைவியாயிற்றே... வில்லி என்று எப்படி காண்பிப்பது? அதனால் வாழ்ந்து கெட்ட குடும்பம், அப்பா சென்டிமெண்ட் என்று ஜல்லியடிக்கிறார்கள். ஒரே புளிப்பு.
கவுண்ட‌ரின் டெஸிபல் குறையவில்லை என்றாலும் காமெடியில் சாயம் போன ஃபீலிங். அடியாட்களை வ‌ரிசையாக நிற்க வைத்து டொப் என்று சுட்டுக் கொல்லும் எழுபதுகளின் வில்லன். கிளைமாக்சில் வில்லனின் முறைப்பைவிட அவனிடம் ஸ்ரேயா காட்டும் விறைப்பு ரசிக்க வைக்கிறது. ஒருமுறை வில்லனின் ஆட்கள் சரத்தின் முன்பாகவே ஸ்ரேயாவை கடத்துகிறார்கள்.

பிரெஞ்சில் வெளியான வாஸபி படத்தின் டிவிடி பாதிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் படம். ஹீரோவின் தாடி, ஹீரோயின் ஹேர் ஸ்டைல், நகப்பூச்சு என அனைத்தும் அச்சு அசலாக அப்படியே. சென்டிமெண்ட் சால்ட் மட்டும் கே.எஸ்.ரவிக்குமார் தயா‌ரிப்பு. (இதில் கதை விவாதம் என்று அரை டஜன் பெயர்கள்).

சரத் துரத்துகிறார். பிடிக்க முடியவில்லை. அத்துடன் இடைவேளை. சரத் ஸ்ரேயாவை எப்படி காப்பாற்றப் போகிறார் என்று இடைவேளைக்குப் பிறகு ஆர்வத்துடன் பார்த்தால், நடுக்கடலில் நண்பர்களுடன் ஸ்ரேயா பிரெண்ட்ஷிப் டே கொண்டாடிக் கொண்டிருக்கிறார். வில்லன்களால் கடத்தப்பட்டவர் எப்படி அங்கு வந்தார்?இயக்குன‌ரிடம் எந்த விளக்கமும் இல்லை.

இடைவேளையை சஸ்பென்சுடன் முடிக்கவே இப்படியொரு காட்சி. பணம் கொடுத்து படம் பார்ப்பவன் எதைப் போட்டாலும் தின்பான். கேள்வியாவது மண்ணாவது.
இளவரசி தனது கடிதத்தில் வில்லனின் ரகசியங்களை அறிந்து அதை எஃப்.பி.ஐ.யிடம் ஒப்படைக்க இருந்ததாக குறிப்பிடுகிறார்.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் வில்லனை பற்றி ஆஸ்திரேலியாவில் இருக்கும் இளவரசி எதற்கு அமெ‌ரிக்க பாதுகாப்புப் பி‌ரிவான எஃப்.பி.ஐ.க்கு தகவல் தர வேண்டும்? ஆஸ்திரேலியாவிலும் எஃப்.பி.ஐ. என்ற பாதுகாப்புப் பி‌ரிவை ஏற்படுத்தியிருக்கிறார்களா? இல்லை ஹாலிவுட் படங்கள் பார்த்த ஹேங்ஓவரா?
படத்தின் முன்னணி பின்னணி என எல்லா இசையுமே சராச‌ரிக்கும் கீழ். அழகான பழைய பாடலொன்றையும் ‌‌ரீமிக்ஸ் என்ற பெய‌ரில் குதறியிருக்கிறார்கள். சரத் கை நீட்டும் இடத்திலெல்லாம் ஆட்கள் அடி வாங்கி விழுகிறார்கள்.

ஆனால் வீக்கம் என்னவோ நமக்குதான்.
ர‌ஜினி நடிக்கயிருந்த படமாம். ம்ஹும்... சூப்பர் ஸ்டார் கிரேட் எஸ்கேப்.