Puthumai Website -புதுமை வலைத்தளம்  

கலைஞர் விழாவும் கலவை உணர்ச்சிகளும்...

Picture
நவரச உணர்ச்சிகளுடன் நடந்து முடிந்தது தமிழக முதல்வருக்கு திரையுலகமே திரண்டு எடுத்த பாராட்டு விழா. 90 ஏக்கர் நிலத்தை திரைப்பட தொழிலாளர்களுக்கு வழங்கிய முதல்வருக்கு நன்றியோடு விழா எடுத்து கவுரவித்தது திரையுலகம். நயன்தாரா-பிரபுதேவா நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை ரசித்து பார்த்தார் முதல்வர். முன்னதாக திரையிடப்பட்ட கலைஞரின் திரையுலக பயணம் குறித்த ஆவணப்படத்தில் ஜெயலலிதா, விஜயகாந்த் படங்கள் கூட இடம் பெற்றிருந்ததுதான் ஆச்சர்யம். ராஜா ராணி படத்தில் சிவாஜி பேசுகிற கலைஞரின் வசனம் நீண்ட நேரம் திரையிடப்பட்ட போது தன்னையும் அறியாமல் கண்கலங்கினார் முதல்வர்.

பக்கத்திலிருந்த ரஜினியும், சிவாஜி மகன் பிரபுவும் கண்கலங்க, சட்டென்று அடுத்த நிகழ்ச்சிக்கு போய் சூழ்நிலையை கலகலப்பாக்கியது விழாக் குழு.

விழாவில் எத்தனையோ கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும், எல்லாரையும் நெகிழ வைத்தவர் லாரன்ஸ்தான். கலைஞரின் காப்பீட்டு திட்டம் எந்தளவுக்கு பயன் தருகிற திட்டம் என்பதை சிகிச்சை பெற்ற முப்பது குழந்தைகளோடு மேடையில் நிருபித்தார் அவர். "இந்த குழந்தைகள் அத்தனை பேரையும் காப்பாற்றியது கலைஞர் கொண்டு வந்த மருத்துவ காப்பீடு திட்டம்தான். இல்லையென்றால் இந்நேரம் இவர்கள் மண்ணுக்குள் இருந்திருப்பார்கள்" என்று கூறிய அவர், அக்குழந்தைகளை கலைஞரை நோக்கி வணங்க வைத்தது நெகிழ்ச்சி.

பிரபுதேவா-நயன்தாரா பெயரை அறிவித்ததும் ரசிகர்களுக்கு உற்சாகம். லேசான மூவ் மென்ட்டுகளுடன் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் ஆடிய நயன்தாரா, மனோகரா பட வசனமான "பொறுத்தது போதும். பொங்கி எழு மனோகரா" என்று பிரபுதேவாவுக்கு சைகை காண்பித்துவிட்டு ஒதுங்கினார். (காதலை மறைக்க அவசியம் இல்லை. பொறுத்தது போதும் என்றும் இதை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்)
சந்தானம்-எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் நடத்திய நாடகத்திற்கு யாருமே சிரிக்கவில்லை. "ஒருத்தரும் சிரிக்கலே, ஓடிப்போ" என்று டயலாக்கிலேயே எரிச்சல் காட்டிவிட்டு மேடையை காலி செய்தார் சந்தானம்.

குயிலி-எஸ்.வி.சேகர் டிராமாவில் அரசியல் வாடை கொஞ்சம் அதிகம்தான். அதிலும் எல்லா மேடைகளிலும் எஸ்.வி.சேகர் சொல்கிற ரோஜாப்பூ காமெடி செம அலுப்பு. ஆச்சர்யமான அதிர்ச்சி, சின்னி ஜெயந்த் நடத்திய குரோர்பதி நிகழ்ச்சி. இந்தியிலேயே பேசினார் சின்னி. மொழி புரியாவிட்டாலும் மொத்த கூட்டமும் ரசிக்க, அமிதாப் பச்சனும், ரஜினியும் கூட விழுந்து விழுந்து சிரித்தனர்.

‘நான்கு மணிக்கு இருக்கையில் அமரவும்’ என்று அழைப்பிதழில் அச்சிட்டிருந்தும் தங்கள் சவுகர்யத்துக்கு வந்து கொண்டே இருந்தார்கள் நட்சத்திரங்கள். இதனால் பாதி பேருக்கு இட நெருக்கடி. அரங்கத்திற்குள்ளேயே வர முடியாமல் தவித்தார் ராதிகா. சரத்குமாருக்கு போன் அடித்தார். ஆனால் அவரோ போனை எடுக்க முடியாதபடி பிசியாக இருந்ததால், கையில் இருந்த தனது காஸ்ட்லி செல்போனை ஆத்திரத்தோடு தரையில் போட்டு உடைத்துவிட்டு உள்ளேயே வராமல் கிளம்பினார் ராதிகா.