Puthumai Website -புதுமை வலைத்தளம்  

கடிதம் போட்ட அன்புமணி:அசல்

Picture
படத்தின் விளம்பரத்தில் அஜித் சுருட்டு பிடிப்பது போன்ற படம்

சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பில், டைரக்டர் சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பாவனா, சமீரா ரெட்டி நடித்துள்ள படம் அசல். இந்த படத்தின் ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் விளம்பரத்தில் அஜித் சுருட்டு பிடிப்பது போன்ற படம் இருப்பதாகவும், அந்த காட்சியை நீக்க வேண்டும் அல்லது படத்தை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பசுமை தாயகம் என்ற அமைப்பின் மூலம் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் ஏராளமான பா.ம.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நடிகர் அஜித், அசல் படத்தின் தயாரிப்பாளர் பிரபு, டைரக்டர் சரண் ஆகியோருக்கு அன்புமணி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

சிறுவர்களையும்,​​ இளைஞர்களையும் புகை பிடிக்கும் கொடிய பழக்கத்துக்கு அடிமையாக்க சிகரெட் நிறுவனங்கள் முயல்கின்றன.​ இதற்காக திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நடிகர்கள் கமல்ஹாசன்,​​ விஜய் உள்ளிட்ட சிலர் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதில்லை என்பதை கொள்கையாக கொண்டுள்ளனர்.​

ஏவி.எம்.​ நிறுவனமும் தங்களது படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெறாது என அறிவித்திருக்கிறது. எனவே தமிழக இளைஞர்களின் எதிர்கால நலன் கருதி,​​ "அசல்' படத்தில் மிகக் குறைவான காட்சிகளில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்குமானால்,​​ அக்காட்சிகள் படத்தின் கதையம்சத்தில் முக்கியமில்லாததாக இருக்கும் எனில் அவற்றை நீக்கிவிடுங்கள்.

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அசல் படம் நாளை மறுதினம் (5ம்‌தேதி) ரீலிஸ் ஆகவிருக்கும் நிலையில் அன்புமணி ராமதாஸ் இப்போது போராட்டம் நடத்துவதும், கடிதம் எழுதியிருப்பதும் அஜித் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரம் குறுகிய கால அவகாசத்தில் சிகரெட், சுருட்டு தொடர்பான காட்சிகளை நீக்க முடியுமா? என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.