Puthumai Website -புதுமை வலைத்தளம்  

அஜீத்தைத்தான் எனக்கு பிடிக்கும்

Picture
கோவா படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பியா, நம்மிடம் மனம் திறந்து பேசுகையில்,

நான் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள இட்டாவா என்ற ஊரில்தான் பிறந்த வளர்ந்தேன்.​ ஒரு நடுத்தர வர்க்க "டிபிகல்' கிராமத்துக் குடும்பம்.​ என்னுடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆசிரியர்கள்.


எங்கள் வீட்டில் எல்லோரும் டீச்சராக இருந்ததாலோ என்னவோ எனக்கு டீச்சர் வேலை பிடிக்கவில்லை.​ ப்ளஸ் டூ முடித்துவிட்டு வீட்டில் டியூசன் எடுத்துக்கொண்டிருந்தேன்.​ இப்படியே தொடர்ந்தால் என்னையும் டீச்சர் ஆக்கிவிடுவார்கள் என பயந்து,​​ அடுத்தது என்ன செய்யலாம் என யோசிக்கத் தொடங்கினேன்.​ அதையடுத்து என் மனதில் உதித்ததுதான் "மும்பை வேலை' திட்டம்.​ வீட்டில் உள்ளவர்களிடம் மும்பை ஹோட்டல் ஒன்றில் ரிசப்ஷன் வேலை கிடைத்திருப்பதாக பொய் சொன்னேன்.​ வீட்டில் சம்மதிக்கவில்லை.​ ஆனால் அடம்பிடித்து என் சர்டிஃபிகேட்டோடு மும்பைக்கு வந்துவிட்டேன்.

அதற்கு முன்பு மும்பையைப் பற்றி எதுவும் தெரியாது.​ இருந்தாலும் மும்பைக்குச் சென்றால் நடிக்கலாம் என்பது என் எண்ணம்.​ நடிப்பு என்றால் வெறும் நடிப்புதான்.​ கதாநாயகி,​​ துணை நடிகை,​​ குணசித்திர நடிகை என்றெல்லாம் இருக்கிறது என்பது கூட எனக்குத் தெரியாது.​ ​ நான் இறங்கிய இடம் தாதர்.​ அங்குள்ளவர்களிடம் மும்பை எங்கே இருக்கிறது என்று கேட்டேன்.​
 
எல்லோரும் என்னை ஏற இறங்கப் பார்த்தார்கள்.​ இதுதான் மும்பை;​ மும்பையில்தான் தாதர் பகுதி இருக்கிறது.​ வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டாயா?​ என்றெல்லாம் பேசி பயமுறுத்தினர்.​ என்ன ஆனாலும் சரி;​ ஒரு கை பார்த்துவிடுவது என நினைத்துக்கொண்டேன்.​ என்னிடம் இருந்தது தைரியமும் தன்னம்பிக்கையும் மட்டுமே.


அதன்பிறகு ஒரு "பான்' கடைக்காரர் உதவியுடன் ஒரு நல்ல ஹோட்டலில் ரூம் எடுத்தேன்.​ அடுத்த நாளே சினிமா சம்பந்தப்பட்டவர்களின் முகவரிகள் அடங்கிய புத்தகத்தை வாங்கி வாய்ப்பு தேட ஆரம்பித்தேன்.​ ஒரே வாரத்தில் ஹிந்தி சீரியல் ஒன்றுக்கு டப்பிங் பேசும் வாய்ப்பு கிடைத்தது.​
 
தொடர்ச்சியாக 5 சீரியல்களில் டப்பிங் பேசினேன்.​ இப்படியாக டப்பிங் பேசிக்கொண்டே வாய்ப்பு தேடும்போதுதான் எதேச்சையாக ஒரு ஷூட்டிங்கில் இயக்குநர் பிரியதர்ஷனைச் சந்தித்தேன்.​ அவர் என்னுடைய போட்டோக்களை வாங்கி வைத்துக்கொண்டு அழைக்கிறேன் என சொல்லிவிட்டார்.​ சில நாள்கள் கழித்து இயக்குநர் விஜய் வந்தார்.​ பிரியதர்ஷன் தயாரிக்கும் "பொய் சொல்லப் போறோம்' படத்தின் கதையைச் சொல்லி நடிக்கிறீர்களா எனக் கேட்டார்.​ ஆனால் எனக்கு தென்னிந்தியப் படவுலகைப் பற்றி தெரியாததால் முதலில் யோசித்தேன்.​ பிறகு சம்மதித்து நடித்தேன்.​ அந்தப் படத்தில் நல்ல பெயர் கிடைத்தது.​ அதையடுத்து "ஏகன்',​ "பலே பாண்டியா',​ "கோவா' உள்பட மேலும் மூன்று படங்களில் வாய்ப்பு கிடைத்தது.​ இதுதான் நான் நடிகையான கதை.

ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தது.​ திரையில் என்னைப் பார்த்ததும் அது மறைந்துவிட்டது.​ சினிமாவுலகைப் பற்றி அவர்களுக்கு விளக்கி பயத்தைப் போக்கிவிட்டேன்.

நம்பர் ஒன் நடிகை ஆக வேண்டும் என்பதில் எல்லாம் எனக்கு ஆர்வம் இல்லை.​ சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்த எனக்கு இப்போது இருக்கும் நிலைமையே சிறப்பானதுதான்.​ தமிழில் மட்டுமல்ல எந்த மொழியாக இருந்தாலும் நல்ல கேரக்டர்களைத் தேர்ந்தெடுத்து நடித்து "அட...​ யாரு இந்தப் பொண்ணு?' என்று ரசிகர்களைக் கேட்க வைத்தாலே போதும்.

 நடிகர்களில் எனக்கு அஜீத்தைத்தான் பிடிக்கும்.​ ஏனென்றால் நடிகர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற என்னுடைய தவறான எண்ணத்தை மாற்றியவர்.​ "ஏகன்' படத்தின்போது அவர் பழகிய விதமும் எளிமையும் ஆச்சரியப்படுத்தியது. மும்பையில் டி.வி.​ சீரியல் நடிகர்கள் காட்டிய பந்தாவைப் பார்த்துப்பழகிய எனக்கு இது புது அனுபவமாக இருந்தது.​